வைகை ஆற்றை சுற்றி நடக்கக் கூடாதது எல்லாம் நடக்கிறது என்று அமைச்சர் மூர்த்தி முன்பு சாலமன் பாப்பையா வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை தனியார் அரங்கில் ‘என் ஊர் என் கனவு’ 2030 தொலைநோக்கு வியூகம் மற்றும் திட்ட ஆவணம் தயாரித்தல் தொடர்பான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, பேராசிரியர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா பேசியதாவது:
மதுரை விரிவடைய வேண்டும் என்பது என்னுடைய கனவு. வைகை ஆறு இல்லை என்றால் மதுரை உருவாகியிருக்காது. மதுரை வைகையாற்றின் இரு புறங்களிலும் உட்கார்ந்து என்னென்னவெல்லாம் நடக்குது என்று சொல்ல முடியாது. அந்த இடத்தை மாற்ற வேண்டும். வைகை ஆற்றை சமப்படுத்த வேண்டும். மணல் முழுவதையும் எடுத்துச் சென்று விடுவார்கள். வரக்கூடிய மணலை வரும் வழியில் எடுத்துக்கொள்கிறார்கள். வைகையில் தண்ணீர் நிலையாக நிற்க வழிவகை செய்ய வேண்டும். நீர் நிறைந்த தேம்ஸ் நதி போல வைகை நதியை மாற்ற வேண்டும்.
வருண பகவான், பூமாதேவி என சொல்லிக் கொள்ளும் நாம் தான் செய்ய முடியாத செயல்கள் அனைத்தையும் செய்கிறோம். மதுரையில் நிறைய வாய்க்கால்கள் உள்ளது. கிருதுமால் நதி ஓடி வருகிறது. இப்போது அதில் குப்பையை போட்டு பொதுமக்கள் செய்துள்ள அக்கிரமம் தாங்க முடியவில்லை. கால்வாய்களில் நீர் நிறைந்து இருக்க வேண்டும். அதை முழுவதிலும் பார்க்கும் போதே கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது.
மதுரையில் உள்ள கண்மாய்களையும் தூர்வார வேண்டும். வண்டியூரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். முதலமைச்சருக்கு நன்றி சொல்ல வேண்டும். இதனை அரசியல் ஆக்கி விடாதீர்கள். நன்றி சொல்வது கடமை. வண்டியூர் தெப்பக்குளம், மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள கடைகளில் சாப்பிட்டுவிட்டு குப்பைகளை தெப்பக்குளத்தில் போடுகிறார்கள்.
மதுரை உயிர்ப்போடு இருப்பதற்கு மீனாட்சி அம்மன் கோவில் தான் காரணம். அதற்கு ஏதாவது சேதம் வந்துவிட்டால் மதுரையின் கதை முடிந்துவிடும். மீனாட்சியம்மன் திருக்கோவிலை அழகுப்படுத்த வேண்டும். இரண்டாவது கோரிப்பாளையம் தர்கா, செயின்ட் மேரிஸ் சர்ச் ஆகிய மூன்றையும் மையப்படுத்தி இருந்தால் தான் நல்லது. சுற்றுலா பயணிகள் வரும்போது மூன்று இடங்களுக்கும் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
மதுரையின் பேருந்து நிலையங்கள் சைத்தான். மதுரைக்கு ஆபத்தான இடம் மதுரை பேருந்து நிலையம் தான். அங்கே ஏற்கனவே நாலாபுறமும் தண்ணீர் வந்து குவியும். ஸ்மார்ட் சிட்டி என கொண்டு வந்தார்கள். எட்டு வருடமாக மூடிப் போட்டிருக்கிறார்கள். பேருந்து நிலையம் முன்பு நன்றாக இருந்தது. தற்போது சத்திரம் சாவடி போல மாறிவிட்டது. எவ்வளவு பணத்தை போட்டார்கள்? என தெரியவில்லை. அவ்வளவும் மூடி கிடக்கிறது.
மதுரை மாநகரில் தேங்கும் தண்ணீரை வைகை ஆற்றில் கொண்டு போய் சேர்ப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். அதற்கான நல்ல பொறியாளர்கள் இருக்கிறார்கள். மீனாட்சியம்மன் திருக்கோவிலில் மழை பெய்து தண்ணீர் தேங்குகிறது. இதை யோசித்துப் பாருங்கள். அந்த கோவில் தான் மையம். அந்த திருக்கோவிலில் தண்ணீர் தேங்கி நின்றால் அந்த கட்டடம் என்ன ஆகும்? அதனால் தண்ணீர் தேங்க விடாதபடி மாற்ற வேண்டும்.
பெரியார் பேருந்து நிலையம் இருக்கட்டும். அது ஒரு அடையாளம். மற்ற பேருந்து நிலையங்களை வெளியே கொண்டு செல்லுங்கள். பேருந்து நிலையம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை போய் பாருங்கள். மதுரையில் அது போன்ற பேருந்து நிலையம் இல்லை என்பது எனக்கு வருத்தம் தான். மதுரையில் பெரிய பேருந்து நிலையம் கொண்டு வர வேண்டும். மதுரை பூங்காக்களை சீரமைக்க வேண்டும்.
மீனாட்சி கோவிலை சுற்றி பஸ் திரும்ப முடியாத அளவிற்கு நெருக்கடி உள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி மினி பஸ்களை போக்குவரத்திற்கு அனுப்ப வேண்டும். மற்ற இடத்திலிருந்து வரும் பக்தர்கள் இறைவனை தரிசிக்க தான் வருகிறார்கள். வீதிகளில் தார் ரோடு அமைக்கிறார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் முக்கால் அடி தோண்டி தார் ஊத்துவார்கள். இப்போது ராத்திரியோட ராத்திரியாக சாலையை போட்டு விடுகிறார்கள். ஒரே மழையில் அது பல் விழுந்த முகம் மாதிரி பள்ளம் ஆகிவிடுகிறது. என்ன காரணம் என தெரியவில்லை. அதனை சரி செய்ய வேண்டும்.
நம்ம ஊரை சுற்றி பார்க்க நிறைய இடம் உள்ளது. இப்போதைக்கு கோவில்கள் நிறைய இருக்கிறது. திருமலை நாயக்கர் மஹால். இப்போது அண்மைக்காலமாக கலைஞர் நூலகம் உள்ளது. வடக்கு பகுதியில் நூலகம் உள்ளது. தென் பகுதியில் ஒரு நூலகம் வேண்டும் என ஆசை. மதுரையில் விளையாட்டு தளங்களை புதிதாக உருவாக்க வேண்டும். பிள்ளைகள் விளையாடுவதற்கு மதுரையில் 100 வார்டிலும் பொது இடங்களில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் போட்டிகளை நடத்த வேண்டும்.
மே மாதம் விடுமுறையில் நகர் சார்ந்த விளையாட்டுகளை நடத்தலாம். விளையாட்டுகளை நடத்துவதற்கு நிதி தேவைப்படும். குறிப்பாக விளையாட்டு ஆசிரியர்களின் துணை தேவைப்படும். அதற்கெல்லாம் சின்ன குழு தயாரிக்க வேண்டும். நான் எனது கருத்து குறித்து விரிவாக கட்டுரையாக வேண்டுமானால் எழுதி தருகிறேன். அண்மையில் மத்திய சிறையை மாற்ற போவதாக சொல்கிறார்கள். அங்கு மிருக காட்சி சாலை அமைக்கலாம். சிறை என்பது மிருகங்கள் இருந்த இடம் தான். அந்த இடத்தில் மிருக காட்சி சாலை வைத்தால் சுற்றுலாவிற்கு சிறந்த இடம்” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:
மனதில் நான் நினைத்ததை சாலமன் பாப்பையா சொல்லிட்டார். மதுரையை சுற்றி கண்மாய் உள்ளது. IT வர வேண்டும். தமிழகத்தில் இருந்த அறிஞர்கள் வெளிநாட்டில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் உணர்வு இப்போது தான் மதுரைக்கு வந்துள்ளது. அனைத்து துறைகளில் உள்ளவர்களுக்கும் அந்த எண்ணம் வந்திருக்கிறது. இவை 3 ஆண்டு காலத்திலயே நடப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது.
வைகையாற்றுக்கு பெருமை உள்ளது. அதற்கான வழிமுறை செய்ய வேண்டும். மீனாட்சியம்மன் கோவிலை தொடர்ந்து வைகையாற்றை சுத்தப்படுத்துவோம். வைகையை சுத்தப்படுத்துவது என்பது எந்த அரசும் முழுமையாக செய்ய முடியாது.
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என மதசார்பற்ற ஊர் மதுரை தான். கோவிலின் நெரிசலை போக்க கீழ வாசல் யானைக்கல் பகுதியில் உள்ளவர்கள் வளர்ச்சிக்காக வெளிவர வேண்டும். சில மாதங்களில் வெளி வருவார்கள். மதுரை அழகாகும். மீனாட்சியம்மன் கோவில் அழகாகும் நிலமையை உருவாக்குவோம்.
வட மாவட்டங்களை போல சில மாதங்களாக தென் மாவட்டங்கள் வளர்ந்து கொண்டு இருக்கிறது. பல்வேறு வகையில் திருச்சி, சென்னைக்கு அடுத்து வந்துள்ளது. சிட்டம்பட்டி முதல் ஆலம்பட்டி சுற்றுச்சாலை ஆய்வுப்பணி நடைபெறுகிறது. திருச்சி, கோவை இன்டர்நேஷனல் ஏர்போர்ட். ஆனால் மதுரை ஆகவில்லை. நிலம் எடுப்பு சரி செய்யப்பட்டுவிட்டது. இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டாக வரவுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மூர்த்தி பேசினார்.

