தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது என்று நடிகர் அனுமோகன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
‘ரெட் லேபிள்’ திரைப்படம் வருகிற பிப்.6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில், படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான லெனின், கதாநாயகி அஸ்மின், இசையமைப்பாளர் கைலாஷ் மேனன், குணச்சித்திர நடிகர் அனுமோகன், கதை ஆசிரியர் பொன் பார்த்திபன் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய கதை ஆசிரியர் பொன் பார்த்திபன், ” கதை ஆசிரியரே படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. கடந்த காலங்களில் கே. பாக்யராஜ், மணிவண்ணன் போன்ற ஜாம்பவான்களே தங்களுடைய கதையினை வேறு ஒரு இயக்குநரிடம் கொடுத்து வெற்றி கண்ட பிறகு தான் இயக்குநராக மாபெரும் வெற்றியை பெற்றார்கள். அந்த வகையில் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும்.” என்றார்.
படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான லெனின், ” ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தை எடுத்து இருக்கிறேன். இதில் எனக்கு எந்தவிதமான லாபமும் கிடைக்க வேண்டாம். பொதுமக்கள் இந்த படத்தை திரையரங்கம் வந்து பார்க்க வேண்டும் என்கின்ற முனைப்போடு எடுத்திருக்கிறேன். 2023 இல் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தற்பொழுது தான் வெளியாக உள்ளது. மேலும் காலம் தாழ்த்தினால் இந்த படத்தில் உள்ள பல காட்சிகள் பல திரைப்படங்களில் வந்துவிடும்.
நடிகர் அனுமோகன் பேசுகையில், ” எனக்கு ஜோதிடம் தெரிந்ததால் சொல்கிறேன். 2026 தமிழ் சினிமாவிற்கு நல்ல ஆண்டாக அமையும். ‘கிரீன் லேபிள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும்.” என்றார். அப்போது, படத்தின் தலைப்பை தவறாக சொல்கிறீர்கள் என மேடையில் அமர்ந்திருந்த படக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதில் அளித்த அனுமோகன், ”எனக்கு கிரீன் லேபிள் தான். மதுப்பழக்கம் உள்ளவர்கள் வேண்டுமானால் ‘ரெட் லேபிள்’ என பெயர் வைத்துக்கொள்ளட்டும். என்னை பொறுத்தவரை இந்த திரைப்படம் கிரீன் லேபிள் தான்.” என நகைச்சுவையாக கூறினார்.
அதை தொடர்ந்து, 2026 சினிமா உலகில் மாற்றம் ஏற்படும் என்று சொல்கிறீர்களே, அரசியல் களத்தில் அதேபோல மாற்றம் ஏற்படுமா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அனுமோகன், நிச்சயமாக மாற்றம் ஏற்படும், ஆனால் நீங்கள் எதிர்பார்க்கின்ற மாற்றம் நிகழாது. தற்பொழுது அனைத்து ஊடகங்களிலும் ஒருவரின் பெயரை அதிகமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறதல்லவா? அவருக்கு மிகப்பெரிய ஆப்பு காத்துக் கொண்டிருக்கிறது என மறைமுகமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை விமர்சித்தார்.

