மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, கேரளா கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதே சமயம், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று முதல் வரும் 5 ஆம் தேதி வரை மிதமான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

