ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார்.
திரவுபதி முர்மு வெற்றி
இந்திய ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் இரவு அறிவிக்கப்பட்டன. ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஒடிசாவை சேர்ந்த பழங்குடியின பெண் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார். அதில் வெற்றி பெற்ற திரவுபதி முர்முவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல் காந்தி, யஷ்வந்த் சின்ஹா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி என பலர் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வரிசையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்தார். இந்த சந்திப்பில் சுமார் 15 நிமிடம் நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தலில் 2,824 உறுப்பினர்கள் முர்முவுக்கு வாக்களித்தனர். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1877 பேர் வாக்களித்தனர். மீதமுள்ள 53 உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்மு நாட்டின் 15வது ஜனாதிபதியாக வருகிற 25ம் தேதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

