மக்களவையில் பிரதமரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார்.
மக்களவையில் கடந்த 4-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பிரதமரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததை கண்டித்து பதாதைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் பிரதமரை சபைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்ட சபாநாயகர் ஓம் பிர்லா அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். மேலும், காங்கிரஸ் பெண் எம்பிக்களால் பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே பிரதமர் உரை தவிர்க்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பதாகைகளுடன் போராடிய வீடியோவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சி தங்களின் பெண் எம்பிக்களின் இழிவான நடத்தை குறித்து பெருமை கொள்வதாகவும் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “பாஜக பெண் எம்பிக்கள் தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால், காங்கிரஸ் பெண் எம்பிக்களால் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியிருக்கும். நாடாளுமன்றத்தின் புனிதத்தையும், கண்ணியத்தையும் காக்க வேண்டிய அக்கறை இருப்பதால் பாஜக பொறுப்புடன் நடந்து கொண்டது” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஓம் பிர்லாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சபாநாயகருக்கு நேற்று கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தில், “மக்களவையின் சபாநாயகராக இந்த அவையின் மாண்பை காக்க வேண்டிய உங்களை, ஒரு ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டை தெரிவிக்க ஆளுங்கட்சி தள்ளிவிட்டுள்ளது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ஆளுங்கட்சி உறுப்பினர்களையும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் பேச அனுமதிக்க வேண்டும் என்பதே மரபு.
ஆனால், தொடர்ந்து 4 நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது கருத்தை கூற அனுமதிக்கப்படவில்லை. அதற்கு நியாயம் கேட்க சென்ற காங்கிரஸ் பெண் எம்பிக்களை, பிரதமர் மீது தாக்குதல் நடத்த சென்றனர் என்று கூறுவது அபத்தமானது. ஒரு தலைபட்சமாக நடந்து கொண்ட சபாநாயகர் என்ற பெயரை பெற்று வரலாற்றில் இடம்பிடித்து விடாதீர்கள்” என்று தங்கள் மீதான விமர்சனத்துக்கு பெண் எம்பிக்கள் பதிலடி கொடுத்திருந்தனர்.
இதனிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் காங்கிரஸ் கட்சி இன்று மக்களவையில் கொடுத்துள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

