காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வந்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே வன்றந்தாங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செல்லாவூர் கிராமம் உள்ளது. இங்கு சில தினங்களுக்கு முன்பு வனப் பகுதியில் இருந்து வந்த இரண்டு காட்டு யானைகள், விவசாய நிலத்திற்குள் புகுந்து நெற்பயிர்கள், சேனைக்கிழங்கு, சாமந்திப்பூ செடிகள், வாழைத் தோட்டம் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு காட்டு யானைகளை குறித்து அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இரண்டு காட்டு யானைகள் விவசாய நிலங்களில் நடமாடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது.
வேலூரில் வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில், சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 யானைகள் கொண்ட கூட்டம், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே வந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் இரண்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் நிரந்தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், காட்பாடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இதுதொடர்பாக பேசினார். ஆட்சியர் பேசுகையில், ”வேலூரில் கடந்த மூன்று ஆண்டுகளில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வருகிற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
இதனை வனத்துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து வனப்பகுதியை ஒட்டிய சுமார் 30 கிராமங்களை கண்டறிந்து, அங்குள்ள பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது.
காட்பாடி, கே.வி.குப்பம், தொண்டான்துளசி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியிலிருந்து இரண்டு யானைகள் வந்து பயிர்களை சேதப்படுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. பயிர் சேதம் எவ்வளவு என்பதை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வந்தால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அவர்களின் பாதுகாப்புக்காக வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை காட்டுப் பகுதிகளுக்குள் அனுப்பி வைக்கின்றனர்.” என்றார்.

