வணிக சிலிண்டர் விநியோக நிறுத்தத்தால் புதுச்சேரியில் சில ஓட்டல்களில் விறகு சமையல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் விறகு விற்பனையும் அதிகரித்துள்ளது.
ஈரான் மீதான போர் காரணமாக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் காஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. புதுவையிலும் சில விநியோகஸ்தர்கள் தட்டுப்பாடு காரணமாக வர்த்தக சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தியுள்ளனர்.
இதேநிலை தொடர்ந்தால் புதுவையில் ஓட்டல்கள் மூடப்படும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சில ஓட்டல்கள் விறகு அடுப்பில் சமைக்க தொடங்கியுள்ளனர்
புதுவை புஸ்சி வீதியில் உள்ள ஓர் ஓட்டல் உட்பட சில இடங்களில் மதிய உணவு விறகு அடுப்பின் மூலம் தயாரிக்கப்பட்டது.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, “காஸ் சிலிண்டர் புக்கிங் செய்தும் வரவில்லை. சுற்றுலா பயணிகள் பலர் ஓட்டலுக்கு வருகின்றனர். அவர்களுக்கு உணவு தர வேண்டிய நிலை உள்ளது. இதனால் கார் பார்க்கிங் இடத்தில் விறகு அடுப்பு மூலம் உணவு தயாரித்து வழங்கி வருகிறோம்” எனத் தெரிவித்தனர்.
புதுவையில் பல இடங்களில் விறகுகள் விற்பனையும் அதிகரித்துள்ளது. பலர் மினி வேன்களில் இப்போதே சவுக்கு மரத்தின் அடிப்பாக விறகுகளை வாங்கி வைக்க தொடங்கியுள்ளனர்.
திருமண மண்டபங்களில் வணிக சிலிண்டர்கள்தான் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டர் நிறுத்தப்பட்டுள்ளதால் அடுத்து வரும் முகூர்த்த நாட்களில் சமையல் செய்வதற்கு காஸ் சிலிண்டர் கிடைக்காத நிலை உள்ளது.
ஒரு சில மண்டபங்களில் 10 வணிக சிலிண்டர் வரை இருப்பு வைத்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஒரு திருமணம் நடத்த மட்டும்தான் பயன்பாட்டுக்கு உதவும். அங்கும் விறகு அடுப்பில்தான் விரைவில் சமையல் செய்யப்படும் சூழல் உள்ளது.
இந்நிலையில் தேசிய ஓட்டல் சங்க பிரதிநிதிகள் இன்று சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை சந்தித்தனர். ஓட்டல் துறையை பாதிக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டினால் ஏற்படும் சிக்கல்களை தெரிவித்தனர்.
அதையடுத்து முதல்வர் ரங்கசாமியை சந்தித்து ஓட்டல் சங்க உரிமையாளர்கள் பேசினர். அப்போது முதல்வர் ரங்கசாமி, “தலைமைச் செயலர் மூலம் மத்திய அரசை அணுகி இருக்கிறோம். தொழில் மேம்பாட்டுக்கு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என்றார்.

