வேளச்சேரியில் இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேளச்சேரி தாண்டீஸ்வரம் பகுதியில் எதிர் எதிர் திசையில் இரு அரசுப் பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. அப்போது, எதிர் பாராத விதமாக இரு அரசுப் பேருந்துகளும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதனால், அந்தப் பகுதியில் பலத்த சப்தம் கேட்டது. உடனே, பேருந்தில் இருந்த பயணிகள் சப்தமிட்டு அலறினர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் 7 பயணிகள் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடனே, காயம் அடைந்த பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

