சிங்கம்புணரி அருகே மாசி மகம் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடுகள் முட்டி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசி மகம் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக, தொழுவிலிருந்து 100 காளைகளும், கட்டுமாடுகளாக 500-க்கும் மேற்பட்ட காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இந்த போட்டியில் 112 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், மஞ்சுவிரட்டை காண ஆயிரக்கணக்கான மக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மலைக் குன்றுகளில் அமர்ந்து ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது காளைகள் சீறிப்பாய்ந்ததில் பார்வையாளர்கள் மற்றும் வீரர்கள் உள்பட பலர் காயமடைந்தனர். மேலும், மாடு முட்டியதில் ஐஸ் விற்பனை செய்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜம்முலால் லால்ஜி, நாட்டார் மங்கலத்தைச் சேர்ந்த ராமநாதன் மற்றும் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டியதில் மொத்தம் 75 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். மாசி மகம் திருவிழாவையொட்டி நடந்த மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடுகள் முட்டி மூவர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

