மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுப்பெற்றது.
இது தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி வருகிறது. இன்று இரவு ஒடிசாவில் உள்ள கோபால்பூரில் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிகாரி கூறியதாவது:- வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவுகிறது.
இது இன்று இரவு கோபால்பூரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் 3 நாட்கள் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
4-ந்தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

