தவெக தலைவர் விஜய், அதிமுக கூட்டணிக்கு வந்தால் அவருக்குத்தான் லாபம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “தேர்தல் ஆணையம் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். மறைந்த தலைவர்களின் படங்களை மறைக்க கூடாது என்றும் தெரிவித்து உள்ளோம். கடந்த காலங்களில் தேர்தல் பறக்கும் படைகளிடம் நாங்கள் புகார் கொடுத்தால் அவர்கள் தகவல் கொடுத்து விடுகிறார்கள். எனவே, பறக்கும் படைகளில் மத்திய அரசின் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், தேர்தல் நடத்தை விதியை ஆளும் திமுக அரசு குப்பையில் போட்டு உள்ளது” என்றார்.
அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த கேள்விக்கு, “தவெக தலைவர் விஜய், அதிமுக கூட்டணிக்கு வந்தால் அவருக்குத்தான் லாபம், இல்லையெனில் அவருக்குத்தான் நஷ்டம். அவரே முடிவு எடுக்கட்டும்” என்று ஜெயக்குமர் பதில் அளித்தார்.
அவரைத் தொர்ந்து பேசிய அதிமுக மாநிலங்களவை எம்.பி. இன்பதுரை, “கரூரில் வாக்காளர்களுக்கு பரிசு கொடுக்க பொதுமக்களை அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கை இல்லை. எனவே, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்து உள்ளோம். மதுரை மற்றும் கோவையில் இருந்து வெளியான முரசொலி நாளேட்டில் அரசு முத்திரையுடன் விளம்பரம் கொடுத்துள்ளார்கள். இதுகுறித்தும் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்து உள்ளோம்” என்று தெரிவித்தார்.

