திருமண நிகழ்வுக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அடுத்த பங்களாபுதூரைச் சேர்ந்த முத்தம்மாள் (60). அவர் கேர்மாளம் வனப்பகுதி சுஜில்கரையில் உள்ள தனது உறவினர் கண்ணையன் என்பவரது வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கனகராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தார். அப்போது வைத்தியநாதபுரம் என்ற இடத்தில் சாலையோரம் யானை நிற்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்குள் யானை அவர்களை தாக்க ஓடி வந்தது. யானையிடமிருந்து தப்பிக்க கனகராஜூம் முத்தம்மாளும் வெவ்வேறு திசையில் ஓடியுள்ளனர். அப்போது முத்தாம்மாள் நிலைதடுமாறி விழுந்துள்ளார். அப்போது யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனகராஜ் சாலையோரமுள்ள பள்ளத்துக்குள் ஓடி உயிர் பிழைத்தார்.
உயிர்த்தப்பிய கனகராஜ் அக்கிராம மக்களிடம் நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் சாலையில் நின்றுகொண்டிருந்த யானையை காட்டுக்குள் விரட்டினர். இரவு நேரம் என்பதால் இரு சக்கர வெளிச்சத்தில் யானை இருப்பது தெரியாமல் போனதே இந்த மனித – விலங்கு மோதலுக்கு காரணம் என வனத் துறையினர் தெரிவித்தனர். முத்தம்மாளின் உடலைக் கைப்பற்றிய கடம்பூர் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

