சென்னை: தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக, சென்னையில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல குவியத் தொடங்கியுள்ளன.
தனியார்மயமாக்கத்தை கண்டித்து, தூய்மை பணியாளர்கள் 11வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையின் பல இடங்களில் குப்பைத் தொட்டிகளில் போடப்படும் குப்பைகள் சேகரிக்கப்படாமல் உள்ளன. இதனால் குப்பைத் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிகின்றன.
சுமார் 10 நாள்களாக குப்பைகள், தொட்டிகளிலும், தெருவோரங்களிலும் கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. தினமும் விட்டுவிட்டு மழை பெய்வதால், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், இல்லையேல் மழைகாலத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.