இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் 452 வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் C.P.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று (12-09-2025) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இதற்கான விழா காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.
துணை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். துணை ஜனாதிபதிக்கு சம்பளம் என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் மாநிலங்களவை தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் கிடைக்கும்.
இது தவிர உறைவிடம், மருத்துவம், பயணம் உள்பட பல சலுகைகள் உள்ளன. ஓய்வுக்குப் பிறகு சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும்.

