‘துரந்தர்-2’ திரைப்பட இயக்குநர் ஆதித்ய தர், திரைப்படத்தைப் பார்த்து ரஜினிகாந்த் பாராட்டியது தன் வாழ்நாளின் “சூப்பர் ஸ்டார்” தருணம் என்றும் பெரும் ஆசீர்வாதம் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பரில் வெளியான துரந்தர் திரைப்படத்தின் முதல் பாகம் 1,300 கோடி ரூபாய் வசூலைக் கடந்து ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் உலகெங்கும் அதிரி புதிரி ஹிட் அடித்து 600 கோடி வசூலைக் கடந்துள்ளது.
சிரஞ்சீவி, ராஜமவுலி, அக்ஷ்யகுமார், நாகார்ஜூனா, ஆலியா பட் உள்பட அனைத்து திரைநட்சத்திரங்களும் துரந்தர்2 படத்தைப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றனர். நடிகர் ரஜினியும் பாக்ஸ் ஆபீஸின் தலைவன் எனப் புகழ்ந்ததுடன், அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என எக்ஸ் தளத்தில் பாராட்டியிருந்தார்.
நாடே புகழ்ந்து கொண்டிருந்தாலும் ரஜினிகாந்தின் பாராட்டால் மெய்சிலிர்த்துப் போய் அவருக்கு மட்டும் துரந்தர்-2 இயக்குனர் ஆதித்ய தர் ரியாக்ட் செய்து பெருமகழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
பொழுதுபோக்கு என்பதற்கு ஒரே அளவுகோலான தங்களைப் பார்த்து வளர்ந்தவன் என்று கூறியிருப்பதுடன் பல ஆண்டுகளாக அனைவரையும் தொய்வின்றி சிரிக்க வைத்தும், விசில் போடவைத்தும் மாயாஜாலங்கள் புரிந்து வரும் தாங்கள் பாராட்டியது ஆசீர்வாதம் போன்றது எனக் கூறியுள்ளார். இது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்றும் மனதில் தைத்துவிட்டது என்றும் புளகாங்கிதத்துடன் ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

