தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமைச்சர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய் சொத்து சேர்த்ததாக தற்போதைய தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர், 2019- ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சட்ட விரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரிக்க சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என கூறி அந்த மனுவை நிராகரித்து தூத்துக்குடி சிறப்பு நீதிமன்றம், 2025- ஆம் ஆண்டு டிசம்பர் 11- ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், “சட்ட விரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மற்ற குற்ற வழக்குகளை விசாரிக்கவும் அதிகாரம் உள்ளது. அதனால், இந்த வழக்கை தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரைக்கு மாற்றுவதால் லஞ்ச ஒழிப்புத்துறைக்கோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்துறை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

