வங்கி கடனை திருப்பி செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய முயன்றதை கண்டித்து வீட்டின் உரிமையாளர் விபரீத முடிவுக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் சாலாமேடு வாரியார் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட்ராஜ். இவரது சகோதரர் கமல்ராஜ். இவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு Equitas Small Finance வங்கியில் வீட்டை அடகு வைத்து ரூ.30 லட்சம் கடன் பெற்றுள்ளனர். கடந்த 5 மாதங்களாக தவணைத் தொகை செலுத்தப்படாததால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்ய வந்துள்ளனர். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
வெங்கட்ராஜ் அண்ணன் கமல்ராஜ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவச் செலவு அதிகரித்துள்ளதாகவும், இதனால் ஐந்து மாத தவணைத்தொகையை கட்ட முடியாமல் போனதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து வங்கிக்கு தகவலளித்து, நேரில் பணம் செலுத்த முன்வந்தும் அதிகாரிகள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் வங்கி அதிகாரிகள் உரிய முன்னறிவிப்பு வழங்காமல் வீட்டை பூட்ட முயன்றதாக கூறி வெங்கட்ராஜ் திடீரென விபரீத முடிவுக்கு முயன்றார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெங்கட்ராஜை தடுத்து நிறுத்தி குடும்பத்தினரை சமாதானப்படுத்தினர். இதன் பிறகு வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை தீர்க்க முயற்சி மேற்கொண்டனர். இந்த சம்பவம் சாலமேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

