புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 60 சதவீத வாக்குகளைப் பெற்று 24 தொகுதிகளுக்கு மேலாக வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
காரைக்கால் சந்தை திடலில் ‘நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா பேசியதாவது:
புதுச்சேரியில் இந்த 5 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 3 முக்கிய வேலைகள் நடந்துள்ளன. ஊழல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசு புதுச்சேரியை டெல்லிக்கு அடிமையாக்கி வைத்திருந்தது. ஆனால், என்டிஏ அரசு புதுச்சேரி அரசாங்கத்தை சுதந்திரமாக செயல்பட வைத்திருக்கிறது. புதுச்சேரி அரசியலில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மக்கள் என்டிஏ, பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், மோடி மீது மிகப்பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். 2021 தேர்தலில் 44 சதவீத வாக்குகளுடன், 30 தொகுதிகளில் 16-ல் வெற்றி பெற்றோம். வரும் தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பெற்று 24 தொகுதிகளுக்கும் மேலாக வெற்றி பெறுவோம். புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் – ஒழுங்கு, அமைப்புகள் சீர்படுத்தப்பட்டுள்ளன. வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் புதுச்சேரியை மேலும் வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்ற வேண்டும். புதுச்சேரி மீனவர்களின் பொருட்களை உலகச் சந்தைகளில் கொண்டு சேர்க்க வேண்டும். இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு தகவல் தொழில் நுட்பம், தரவுகள் மையம் (டேட்டா சென்டர்), ஏஐ, மென்பொருள் உள்ளிட்ட துறைகள் சார்ந்த மையமாக புதுச்சேரியை ஆக்க வேண்டும், புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க 3 விஷயங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் கவனம் செலுத்தப்படும்.
பிரதமர் மோடி அண்மையில் மலேசியா சென்றபோது, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவருக்கான இருக்கை ஒன்றை ஏற்படுத்துவதாகவும், மலேசிய வாழ் தமிழ் மாணவர்களுக்கு திருவள்ளுவர் பெயரில் கல்வி ஊக்கத்தொகை அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். மோடியின் செயல்பாடுகளால் மலேசியாவில் தமிழ் மொழிக்கு சிறுபான்மை மொழி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் முந்தைய நாராயணசாமி அரசு, டெல்லி காங்கிரஸ் தலைமையின் கஜானாவை நிரப்பும் வேலையை மட்டும் செய்தது. சென்டாக் அமைப்பு மூலம் உயர்கல்வி சேர்க்கையில் எஸ்.சி- எஸ்.டி-யினருக்கான இடஒதுக்கீட்டை ஏலத்தில் விட்டார்கள். நாராயணசாமி ஆட்சிக் காலத்தில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை வந்துள்ளது. இத்தொகை புதுவையின் 3 ஆண்டு கால பட்ஜெட் தொகையாகும்.
அவரது ஆட்சியில் ஒரு தொழில்கூட தொடங்கப்படவில்லை. என்டி ஏ அரசு நலிவடைந்த கூட்டுறவு நிறுவனங்களை புத்துணர்ச்சி பெறச் செய்துள்ளது. ஸோகோ நிறுவனம் மூலம் மென்பொருள் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. மடிக்கணினி தயாரிக்கும் நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது. புதுவையில் தயாரிக்கும் மடிக்கணினிகள் 70 நாடுகளுக்கு ஏற்றுமதியாகவுள்ளது.
ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்துள்ளார். ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளுடன் பிரதமர் மோடி செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நன்மைகள் மட்டுமே கிடைக்கும். புதுச்சேரி வளர்ச்சிக்கான அறிவிப்புகளை பிரதமர் மோடி விரைவில் வெளியிடவுள்ளார். எனவே, மோடி மற்றும் ரங்கசாமிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

