படிக்கும் வயதில் காதலித்து வாழ்க்கையை இழக்க வேண்டாம் என 17 வயது சிறுமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்னம்மாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “எனது 17 வயது மகள் சேலம் அரசு கலைக்கல்லூரில் பி.காம் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால் மகளை காணவில்லை என்று ஜனவரி 19 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரின் அடிப்படையில், பெண் மாயம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. என்பதால், எனது மகளை மீட்டுத்தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணாமல் போனதாக கூறப்படும் 17 வயது சிறுமியை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, அந்த பெண்ணிடம் விசாரித்த நீதிபதிகள், விருப்பத்திற்கு மாறாக யாராவது உங்களை கடத்தினார்களா? நீங்களாக விருப்பத்துடன் சென்றீர்களா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அந்த சிறுமி, தன்னை யாரும் கடத்தவில்லை. தங்கள் பகுதியில் உள்ள 23 வயதான சரவணன் என்பவரை காதலிப்பதால், சுய விருப்பத்துடன் அவருடன் சென்றேன். வீட்டிற்கு சென்றால் தன்னை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என்பதால் காதலனுடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து பெண்ணின் பெற்றோரை அழைத்த நீதிபதிகள், படிக்கும் வயதில் திருமணம் செய்து வைப்பது தவறு. 18 வயது வரும் வரை திருமணம் செய்து வைக்க கூடாது. மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கும் பெற்றோர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். அவர்களுக்கு என்ன விருப்பம் மற்றும் தேவை என்பதை கேளுங்கள் என்று அறிவுரை வழங்கினர்.
தொடர்ந்து சிறுமியுடன் பேசிய நீதிபதிகள், படிக்கும் வயதில் காதலித்து வாழ்க்கையை இழந்து விட வேண்டாம். வாழ்க்கையில் ஜெயிக்க கல்வியால் மட்டுமே முடியும். பெற்றோர்கள் உழைப்பது குழந்தைகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதற்கு தான். குழந்தைகளின் எதிர்காலத்தை பெற்றோரே அழித்துவிட மாட்டார்கள்.
18 வயது வரும் வரை பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். அதையும் மீறி பெற்றோர்கள் நிர்பந்தம் செய்தால், நீதிமன்றத்தையோ? காவல்துறையையோ? அணுகலாம். அதனால் படிப்பில் மட்டும் தற்போது கவனம் செலுத்துங்கள் என அந்த சிறுமிக்கு அறிவுரை வழங்கினர். இதன் பிறகு சிறுமியை அழைத்து சென்ற சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

