தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் ஒரு சவரன் ரூ.77 ஆயிரம் என்ற நிலையில் விற்பனையானது. அதன்பிறகு விலை ‘கிடுகிடு’வென உயரத் தொடங்கியது. கடந்த 6-ந் தேதி ஒரு கிராம் ரூ.10 ஆயிரம் என்றும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் என்றும் அதிகரித்து, அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் விறுவிறுவென விலை ஏற்றம் கண்டது. காலையில் கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் அதிகரித்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்தது. அப்படியாக நேற்று மட்டும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. பொருளாதார மந்த நிலையில், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் விலை உயருகிறது.
இதனை தொடர்ந்து, மாத இறுதி நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,860-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

