சென்னை: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை போலீஸ் கைது செய்திருப்பதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஒருபுறம் கூலி பாடம் பார்த்து கொண்டே மறுபுறம் தூய்மை பணியாளர்களை அத்துமீறி அப்புறப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்! ஸ்டாலின் என்ற மனிதனின் மனதில், எங்கள் மக்கள் மீது அப்படி என்ன வெறுப்பு?
தூய்மை பணியாளர்களை அடித்து துரத்திய ஸ்டாலின் அவர்களே, உங்களை விரட்டுகின்ற நேரமும் காலமும் வெகுதூரம் இல்லை. 13 நாட்களாக போராடியவர்களை ஒரு 10 நிமிடம் பார்க்க நேரம் இல்லை. ஆனால் 3 மணி நேரம் கூலி படத்திற்கும்,மோனிகா பாட்டுக்கும் வைப் செய்ய நேரம் இருக்கிறதா?
நீங்கள் தற்போது அடித்து சிறையில் தள்ளப்பட்ட மக்கள் தான் உங்களை அதிகாரத்தில் அமர வைத்தவர்கள். இனி குப்பையை போல உள்ள உங்கள் பாசிச அரசை அவர்களே அகற்றி எறிவார்கள். நம்புங்கள். நாம் நாட்டின் 79-வது சுதந்திர தினம் கொண்டாடி கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அந்தப் பதிவில் டி.ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.