ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாகி இருப்பது விரைவில் அங்கு நடைபெற சட்ட மன்ற தேர்தலுக்கு சாதகமாக அமையலாம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். ஜம்மு & காஷ்மீர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்திருக்கும் இந்த மக்களவை தேர்தலில் 58.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வாக்கு செலுத்த தகுதி வாய்ந்த 87,26,281 வாக்காளர்களில் 51,11,550 பேர் வாக்களித்துள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர், ஜம்மு காஷ்மீரில் தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். அதே போல மற்றோரு யூனியன் பிரதேசமான லடாக்கில் 71.82% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதே போல கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை விட இந்த தேர்தலில் 25 சதவீதம் அதிகமாக போட்டி இட்டுள்ளனர். சி.விஜில் உள்ளிட்ட தளங்களில் வரும் புகார்கள் அந்த பகுதியில் வாழும் மக்கள் தேர்தல் அரசியலில் கொண்டுள்ள ஈடுபாட்டை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. இது வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக செயல்முறை தொடர்ந்து செழித்து வளர்கிறது. என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஸ்ரீநகர் தொகுதியில் 38.49% வாக்குகளும், பாரமுல்லா தொகுதியில் 59.1% அனந்த்நாக்-ராஜோரி தொகுதியில் 54.84% வாக்குகள் பதிவாகியுள்ளன, இது தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி கடந்த முப்பதாண்டுகளில் பதிவான அதிகபடியான வாக்குகளாகும். மேலும் உதம்பூர் 68.27% சதவீத வாக்குகளும், ஜம்மு தொகுதியில் 72.22% வாக்குகளும் பதிவாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று தேர்தல் ஆணையத்தின் ட்வீட் ஒன்றை மேற்கோள் காட்டி, “லோக்சபா தேர்தலில் சாதனை படைத்த அனந்த்நாக் – ரஜோரியில் உள்ள எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்தலில் அவர்களின் உற்சாகமாக பங்கேற்றது அவர்களின் ஜனநாயக உணர்விற்கு ஒரு துடிப்பான சான்றாக விளங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருந்தார்.