அரசியல்தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்தார் சீமான்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வரும் ஜூலை மாதம் 10ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் படி இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (ஜூன் 14) தொடங்க உள்ளது . வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 21ஆம் தேதி அதே போல மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டி இடுவதற்கான திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதிக்கான வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதே போல தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக நேரடியாக களம் இறங்குகிறதா அல்லது அதன் கூட்டணி கட்சியான பாமக போட்டியிடுகிறதா என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் – மருத்துவர் அபிநயா

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் விக்கிரவாண்டி வேட்பாளரை அறிவித்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர் அபிநயா போட்டி இடுவார் எனவும், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அபிநயா அவர்கள் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டு 65,381 வாக்குகள் பெற்று நான்காவது இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts