38 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள “மழை பிடிக்காத மனிதன்” என்ற படத்தில் சத்யராஜ், சரத்குமார், மேகா, ஆகாஷ் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பட குழு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய சத்யராஜ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி, இருவரும் 38 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகின்றனர். கடைசியாக 1986 ஆம் ஆண்டு வெளியான “மிஸ்டர் பாரத்” படத்தில் சத்யராஜும், ரஜினி காந்தும் அப்பா மகனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிஸியாகும் நடிகர் சூர்யா:
சிறுத்தை சிவா இயக்கும் “கங்குவா” படத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யா நடித்து வரும் நிலையில், இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து, சூர்யா சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு படத்திலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார். மேலும், வாடிவாசல் படம் கிடப்பில் உள்ளதால் சுதா கொங்கரா, கார்த்திக் சுப்பராஜ் படங்களை பெரிதும் நம்பு உள்ள சூர்யா. ஹிந்தியில் கர்ணனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் ஒரு படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
படங்களை தேர்வு செய்து நடிப்பதில் கவனம்:
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “சைரன்” படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதனை அடுத்து படங்ககளை தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ரவி, அடுத்தடுத்து கலவையான கதை களம் கொண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பேண்டஸி முறையில் உருவாகும் “ஜீனி” படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கு அடுத்ததாக கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் “காதலிக்க நேரமில்லை” படம் முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் கலந்தது. இதை அடுத்த மோகன் ராஜா இயக்கத்தில் “தனி ஒருவன் 2”, இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் குடும்ப கதை களம் கொண்ட படங்களில் நடிக்க இருக்கிறார்.
தமிழில் மீண்டும் தமன்னா :
ஹிந்தியில் வெப் சீரிஸ்களில் தொடர்ந்து நடித்து வரும் தமன்னா சில நாட்களுக்கு முன் வெளியான அரண்மனை 4 படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பிறகு தமிழிலும் மீண்டும் கவனம் செலுத்த உள்ளார். குறிப்பாக இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாகவும், விரைவில் ஒரு தமிழ் படத்தில் தமன்னாவை காணலாம் எனவும் கூறப்படுகிறது.