இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் உரையாற்றினார். அப்போது சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினரான திருமாவளவன் தனது நாடாளுமன்ற உரையில், மத்திய அரசு நாடு முழுவதும் போதைப் பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கை அமல்படுத்துவதின் அவசியம் பற்றியும் எடுத்துரைத்தார். அப்போது பேசிய அவர் இந்திய அளவில் இளம் தலைமுறை பாழாகி வருவதை எண்ணி வேதனைப்படுகிறேன். இந்த அரசுக்கு அந்த வேதனை இருக்கிறதா என கேள்வி எழுப்ப விரும்புகிறேன். மனிதவளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. போதைப்பொருள் என்பது இங்கொன்றும், அங்கொன்றுமாக இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக தாராளமாக புழக்கத்தில் உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. 4 மாநிலங்களை தவிர எல்லா மாநிலங்களிலும் அரசு மதுபானம் விற்பனை செய்கிறது. இது நாட்டுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம். இளைஞர்களுக்கு செய்கிற துரோகம். மனிதவளத்தை சிதைப்பதற்கான நடவடிக்கை. எனவே தேசிய மதுவிலக்கிற்கு அரசு ஒரு கொள்கையை கொண்டு வந்து இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வீர ஆவேசமாக பேசினார்.
முதலில் தமிழ்நாட்டுக்கு அறிவுரை சொல்லுங்கள் – நிர்மலா சீதாராமன் பதிலடி
திருமாவளவனின் பேச்சுக்கு பதில் சொல்ல எழுந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருமாவளவனின் பேசிய கருத்தை நான் வரவேற்கிறேன். ஆனால் அவரது கட்சி கூட்டணி வைத்துள்ள கட்சியின் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. அங்கு 56 பேர் கள்ளச்சாராயம் குடித்து பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதனால் உங்களது அறிவுரைகளை முதலில் தமிழ்நாட்டுக்கு சொல்ல வேண்டும். போதைப்பொருளின் பயன்பாடு தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது என பதிலடி கொடுத்தார்.
இதை கேட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நமது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டதே என வெட்கி தலை குனிந்து கூச்சலிட ஆரமித்து விட்டனர். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் மானத்தை கப்பல் ஏற்றிய இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இந்திய அளவில் கவனிக்கத்தக்க விஷயமாகி மாறிவிட்டது.