தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள கோம்பையில் 20 ஆண்டுகளுக்கு பின், அருள்மிகு திருமலைராயப் பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் மே 22ம் தேதி நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. இதனால் கோம்பை நகர் முழுவதும் இன்று விழாக் கோலம் பூண்டுள்ளது.
கலவரத்தால் நின்ற தேர் திருவிழா
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய தேர்களில் இக்கோயில் தேரும் ஒன்று. கோம்பை மட்டுமல்லாது 18 கிராமங்களை சேர்ந்தவர்களும் இணைந்து இக்கோயில் தேரோட்டத்தை நடத்துவது வழக்கம். கோம்பை தேர் திருவிழா நடைபெற்று 20 வருடங்கள் ஆகிறது. கடைசியாக 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த அழகான தேர் திருவிழா கலவரத்தால் நின்று போனது. இந்தாண்டு தேர் திருவிழா நடத்த கோம்பையில் உள்ள அனைத்து சமுதாய தலைவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, தேரை பிரித்து பராமரிப்பு பணிகள் துவங்கிய நிலையில், கடந்த மே 12 முதல் வரும் ஜூன் 5ம் தேதி வரை 25 நாட்கள் மண்டகப்படி நடைபெறும். நாளை தேர் அடி பெயர்ந்து, தொடர்ந்து 23, 24 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. பொதுவாக தேரோட்டம் முடிந்தவுடன் நிகழ்ச்சிகளும் நிறைவு பெறுவது வழக்கம். ஆனால் கோம்பையில் தேர் மே 24ம் தேதி நிலைக்கு வந்த பின்னரும், தொடர்ந்து மண்டகப்படி ஜூன் 5 வரை நடைபெறுவது தனிச்சிறப்பாக இருக்கிறது.
செங்கோலை அடிப்படையாக கொண்டு நடைபெறும் தேர் திருவிழா
இந்த தேரோட்டத்தில் அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், மல்லிங்காபுரம், கரியணம்பட்டி, மேலசிந்தலச்சேரி, கீழ சிந்தலச்சேரி, ரெங்கநாதபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களும் மண்டகப்படி நடத்துகின்றனர். மேலும்,கடந்த முறை கலவரம் நடந்த நிலையில், இந்த முறை அதை தடுக்கும் வகையில் அதிகப்படியான காவல்துறையினரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் சிறந்த ஜமீனாக கோம்பை திகழ்ந்தது. மேலும், செங்கோலை அடிப்படையாக கொண்டே இங்கு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜமீன் அரண்மனையில் இருந்து செங்கோல் பெற்று திரிமலைராய பெருமாள் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தேரோட்டம், மண்டகப்படி நிகழ்ச்சிகள் முடிந்து ஜூன் 5 ஆம் தேதி சுவாமி மலைக்கோயிலிற்கு செல்லும் போது, செங்கோல் அரண்மனையில் ஒப்படைக்கப்படும்.