தமிழ்நாடு

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

இயல்பை விட 9% கூடுதல் மழைப்பொழிவு

தமிழத்தில் ஒரு சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளுமையான சூழல் உருவாகி உள்ளது. தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 9% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும், இது வடகிழக்குத் திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் 24ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தென்தமிழக கடலோரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நாளை (மே.22) தேனி,  விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மே 23-ல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் 24ம் தேதி நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குற்றாலத்தில் குளிக்க தடை

ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்தில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார். நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை தொடர்கிறது. இதே போல மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை தொடங்க இருந்த அரசு பொருட்காட்சி, கனமழை காரணமாக நாளை மறுதினம் தொடங்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related posts