ரயில் ஆர்வலர்களும் பயணிகளும் உற்சாக வரவேற்பு
நாட்டின் தலைநகரான டெல்லி செல்வதற்கு தமிழக பயணிகள் அதிகம் தேர்ந்தெடுப்பது “தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்” கடந்த 1976-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் வாரம் 3 முறை மட்டும் இயக்கப்பட்ட இந்த ரயில் 1988-ம் ஆண்டில் இருந்து தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டது. சென்னையில் இருந்து தினமும் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் காலை 6.30 மணிக்கு டெல்லி சென்றடையும். மேலும் விஜயவாடா, வாராங்கல், நாக்பூர் மற்றும் போபால் உள்பட முக்கியமான 11 ரயில் நிலையங்களில் நின்று டெல்லி சென்றடையும். மறுமார்க்கமாக, டெல்லியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, 3-ம் நாள் காலை 6.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் வந்தடையும். இந்த ரயிலானது 2 ஆயிரத்து 182 கிலோ மீட்டர் தூரத்தை 32 மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்து செல்கிறது. தென் இந்தியாவையும், வடஇந்தியாவையும் இணைக்கும் விதமாக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் திகழ்கிறது.
இந்த ரயில் சேவை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு நிலையங்களில் வளர்ச்சியடைந்து வந்தது. தற்போது, இந்த ரயிலில் எல்.எச்.பி. எனும் நவீனப்பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தனது 48 -ம் ஆண்டு சேவையை நிறைவு செய்து, 49-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதற்கான விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு கொண்டாடப்பட்டது.
சென்னை கோட்ட முதுநிலை வணிக மேலாளர், ரயில் நிலைய இயக்குனர், அதிகாரிகள், பயணிகள் இதை கலந்து கொண்டனர். தொடர்ந்து லோகோ பைலட் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னர் டெல்லி புறப்பட்ட அந்த ரயிலை, அனைவரும் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர். தற்போது இந்த ரயிலானது 49-வது ஆண்டினை அடியெடுத்து வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் பெயரை கொண்ட இந்த ரயில் தமிழ் நாட்டிற்குள் ஒரு நிறுத்தத்தை மட்டும் கொண்டுள்ளது. அதுவும் ரயில் புறப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்கிறது. எனவே, தமிழ்நாடு பெயர் கொண்ட இந்த ரெயில் கன்னியகுமாரி வரை நீடிக்கப்பட வேண்டும் என்பதே தமிழக ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.