சரும பராமரிப்பில் முக்கியமானது சன்ஸ்கிரீன். க்ரீம், ஸ்ப்ரே, லோஷன் என பல வடிவங்களில் சன்ஸ்கிரீன்கள் வருகிறது. ஆனால் சன்ஸ்கிரீன் மாத்திரைகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் பயன்பாடு, நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இங்கே பார்ப்போம்.
சன்ஸ்கிரீன் பயன்பாடு
சூரிய ஒளி கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். ஏனெனில் அதிலிருந்து வரும் UV கதிர்கள் சருமத்திற்கு ஆபத்தானவை. இதனால் முகச்சுருக்கம், கருமை என பல சரும பிரச்சனைகள் ஏற்படும். இதிலிருந்து நம் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
சன்ஸ்கிரீன் மாத்திரைகள் எப்படி பயன்படுகிறது?
வைட்டமின்கள் சி, ஈ மற்றும் கே போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபெர்ன் இலைகளிலிருந்து எடுக்கப்படும் இயற்கையான சாறு ஆகியவை நிறைந்தது சன்ஸ்கிரீன் மாத்திரைகள். மேலும் இது அதிக ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது உடலுக்குள் இருந்து வேலை செய்வதால், புற ஊதா கதிர்களில் இருந்து உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களின்(நமது சரும செல்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும் மூலக்கூறு) விளைவை கட்டுப்படுத்துகிறது.
நன்மைகள்
- இது புற ஊதா கதிர்களுக்கு எதிராக சருமத்தை பாதுகாக்கிறது.
- முகச்சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.
- பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் போன்ற கரோட்டினாய்டுகள் இருப்பதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- கொலாஜன் உற்பத்தியை ஆதரிப்பதன் மூலம் ஆரோக்கியமான சரும செல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
- மாத்திரைகளாக எடுத்துக்கொள்வது எளிது. அடிக்கடி க்ரீம் பயன்படுத்த தேவையில்லை.
- UV கதிர்களால் ஏற்படும் கருமையை தடுக்கிறது.
சன்ஸ்கிரீன் மாத்திரைகள் சருமத்திற்கு நன்மைகள் என்றாலும், இவற்றை குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இதன் செயல்திறன் இன்னும் சோதனையில் மட்டுமே உள்ளது. க்ரீம், லோஷன் போன்றவற்றை விட இது சிறந்ததா? என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே மருத்துவர் ஆலோசனையுடன் சன்ஸ்கிரீன் மாத்திரைகளை பயன்படுத்துவது நல்லது.

