ஆன்மீகம்சமூகம்

புத்த பூர்ணிமா கொண்டாடப்படுவதன் காரணம் என்ன?

புத்த பூர்ணிமா என்பது கௌதமர், புத்தராக பரிணமித்த திருநாளாகக் கொண்டாடப்படும் பௌர்ணமி நாளாகும்.

ஏறக்குறைய எட்டாண்டு காலம் தன் உடலையே பெரும் சேதத்துக்கு ஆட்படுத்துகிற விதமாக மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார்.

நான்காண்டு காலம் சமணா என்னும் மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார். சமணா என்பது உண்ணா நோன்பு இருப்பதும், யாரிடமும் உணவு கேட்காமல் நடந்து கொண்டே இருப்பதும் ஆகும். பலரும் சமணா சாதனையை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் மனிதர்கள் இருக்கிற பகுதியின் வழியாக நடந்து செல்வார்கள். இவர்கள் சமணா நோன்பு நோற்பதை அறிந்து மக்கள் தாமாக உணவு படைப்பார்கள்.

ஆனால் கௌதமரோ, மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே நடந்தார். அதன் காரணமாக மரணத்தை நெருங்கும் அளவு தன் உடலை சிதைத்துக்கொண்டார். அப்போதுதான் நிரஞ்சனா என்கிற நதிக்கு அருகே வந்தார். இப்போது அந்த நதி இல்லை. அந்த நதியில் முழங்கால் அளவுதான் தண்ணீர் இருந்தது. ஆனால் வேகமாகப் பாய்ந்துகொண்டு இருந்தது. மிகவும் பலவீனமாக இருந்த கௌதமரால் அடுத்து ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

அங்கே இருந்த ஒரு சிறு கிளையைப் பற்றிக்கொண்டார். அப்படியே பல மணி நேரங்கள் அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அல்லது சிறிது நேரம் இருந்திருந்தாலும் கூட, உடல் சோர்வு காரணமாகப் பல மணி நேரங்கள் கழிந்ததாகத் தோன்றியிருக்கலாம். அந்த வினாடியில்தான் அவருக்குள் ஓர் எண்ணம் பிறந்தது.

“இதற்கு வேண்டியதெல்லாம் முழுமையான விருப்பம்தான். அது இப்போது இருக்கிறது. பிறகு எதைத் தேடி இந்தப் போராட்டம்?” இதை உணர்ந்தபோது அவருக்கு கொஞ்சம் சக்தி பிறந்தது. எனவே நதியைக் கடந்த அவர், தற்காலத்தில் புத்தரைக் காட்டிலும் கூடுதல் புகழ் பெற்றிருக்கிற போதி மரத்தின் கீழ் சென்றமர்ந்தார்.

அந்த மரத்தின் கீழ் சம்மணம் இட்டு அமர்ந்த அவர், ‘ஞானோதயம் நிகழும் வரை நான் அசைய மாட்டேன், எழுந்தால் ஞானம் பெற்றவனாக எழுவேன், இல்லையெனில் இப்படியே இறந்துவிடுவேன்’ என்று முடிவு செய்தார். ஒரே கணத்தில் ஞானம் பிறந்தது.

இந்த நாளில், ஞானோதயம் அடைவதற்குத் தேவையான ஒரே விஷயம், அதை வாழ்க்கையின் ஒரே நோக்கமாக மாற்றுவதுதான் என்று கௌதம புத்தர் உணர்ந்தார்.

Related posts