தமிழ்நாடு

2000 போலீசார் பாதுகாப்புடன் நடந்து முடிந்தது தீபக் ராஜாவின் ஊர்வலம்

கடந்த 20ம் தேதி நெல்லை கேடிசி நகர் பகுதியில் உள்ள வைர மாளிகை ரெஸ்டாரண்ட் முன்பு வாகைகுளத்தை சேர்ந்த தீபக் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. குறிப்பாக ஜாதி ரீதியாக நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளரான தீபக் ராஜா தனது பெயருக்கு பின்னால் தீபக் பாண்டியன் என்றும் மாற்றிக்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ல் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் நெல்லை மாவட்டம் தாழையூத்தில் நடைபெற்ற கொலை வழக்கு ஆகியவற்றிலும் தீபக் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த தீபக் ராஜா அந்த சமூக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த சமூகம் சார்ந்த நிகழ்வுகளிலும் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்படி இருக்கும் சூழ்நிலையில் தீபக் ராஜா சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட சம்பவம் நெல்லை சுற்றுவட்டார பகுதியில் பதட்டத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சேரா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் தீபக் ராஜா மீது ஏற்கனவே கொலை உள்பட சில வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

6 தனிப்படைகள் அமைப்பு 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் வரை கொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே அவரது உடல் உறவினர்களால் பெற்றுக் கொள்ளப்படாமலேயே 7 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உறவினர்கள் கொடுத்த அழுத்தத்திற்கு பிறகு இவ்வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2000 போலீசார் பாதுகாப்பு

இந்த நிலையில் போலீசாரின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து தீபக் ராஜாவின் உடலை பெற்றுக் கொள்வதற்கு அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதற்கு அடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தீபக் ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தொடர்ந்து நெல்லையிலிருந்து வளையங்குளத்திற்கு அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல திட்டமிட்டு, சுமார் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ஊர்வலமாக சென்றனர். சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில் 5 மணி நேரமாக நடந்த அவர்கள் அதற்கு பிறகு அவரது உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக நெல்லையில் எதுவும் பிரச்சினை ஏற்படலாம் என்பதன் காரணமாக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. சுமார் 2000 போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபக் ராஜாவின் ஊர்வலத்தின் போது மட்டும் சுமார் 500 போலீசார் உடன் சென்றனர்.

Related posts