பிரதமர் மோடியை ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை (100 மில்லியன்) தாண்டியதற்கு, உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘டுவிட்டர்’ என்று முன்னர் அறியப்பட்ட, தற்போதைய ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி 2009ல் இணைந்தார். கட்சி மற்றும் அரசின் அறிவிப்புகளை வெளியிடுவது, பல்வேறு பிரச்னைகள் குறித்த தன் கருத்துக்களை கூறுவது, தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வது மற்றும் மக்களுடன் அவ்வப்போது கலந்துரையாடுவதற்கு எக்ஸ் சமூக வலைதளத்தை மோடி பயன்படுத்துகிறார்.
இதில் அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து தற்போது 10 கோடி என்ற சாதனை எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இப்பட்டியலில் உலகில் அரசியல் தலைவர்களில் பாரக் ஒபாமாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்திலும், ஒட்டுமொத்தமாக 7வது இடத்தில் மோடி உள்ளார். இதற்காக, பிரதமர் மோடிக்கு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் இது குறித்து எக்ஸ் தளத்தில், ‛அதிகம் பின்பற்றப்படும் உலகத் தலைவராக இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள்!’ என வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
previous post
next post