பிரான்சின் பாரிசில் 33 வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. உலக அளவில் நடந்த பல்வேறு தகுதி சுற்றுகளில் சாதித்த இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். உலக தரவரிசை அடிப்படையில் பலருக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.
பாரிசில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் இந்திய அணி சார்பில் 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர், 16 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் 122 பேர், 18 வகையான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்ற ககன் நரங் இந்திய குழு தலைவராக பாரிஸ் செல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.இம்முறை ஈட்டி எறிதலில் டோக்கியோவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தமிழகத்தை சேர்ந்த பிரவின் சித்ரவேல் உட்பட தடகளத்தில் 29 பேர் பங்கேற்கவுள்ளனர்.