நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த இரண்டு முறையும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த பாரதிய ஜனதா கட்சி இந்தமுறை கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கிறது. எனவே, இந்தமுறை மத்திய அமைச்சரவையில் கூட்டணிக்கட்சிகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகம் இடம்பெற்றிருக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவைக்கான சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராஜஸ்தான் கோட்டா தொகுதி மக்களவை உறுப்பினரான ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவின் மாவெளிக்கெரே தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான கொடிக்குன்னில் சுரேஷும் வேட்பாளராக நிறுத்தப்பட்டனர்.
பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் முடிவில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தற்காலிக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு எதிராக இந்தியா கூட்டணி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.
அதன் பிறகு மக்களவை சபாநாயகராக ஓம்.பிர்லா குரல் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, ஆளும் அரசான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடியும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து ஓம்.பிர்லாவை சபாநாயகர் நாற்காலியில் அமர வைத்தனர். இரண்டாவது முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓம்.பிர்லாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “சபையின் சார்பாக உங்களை வாழ்த்த விரும்புகிறேன்.நீங்கள் இரண்டாவது முறையாக சபாநாயகர் பதவியில் அமர்ந்திருப்பது மிகப்பெரிய பொறுப்பு. உங்கள் அனுபவத்தால், நீங்கள் எங்களுக்கு வழிகாட்டுவீர்கள் என்று நம்புகிறோம் என பேசினார்.
அதன் பிறகு பேசிய எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இரண்டாவது முறையாகத் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் மற்றும் இந்தியா கூட்டணி சார்பாக உங்களை வாழ்த்த விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எந்த ஒரு தீர்மானத்தையும் சபாநாயகரின் அனுமதி இல்லாமல் கொண்டுவரவும் முடியாது. அரசின் மசோதாக்களை ஏற்பது, நிராகரிப்பது ஆகியவையும் சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது ஆகும். மக்களவை உறுப்பினர்கள் கட்சித் தாவல் விவகாரத்தில் சபாநாயகரின் முடிவுதான் அதிகாரம் கொண்டது. இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் ஒரே அளவிலான மக்களவை உறுப்பினர்களை கொண்டிருப்பதால் சபாநாயகரின் பணி சவாலானாதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.