8.19 சதவீதம் வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி
தமிழகத்தில் கட்சி துவங்கியதில் இருந்தே தனித்து போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு சதவீதத்தை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு மக்கள் மத்தியில் அதிகரிப்பது தெரிய வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றிருந்தது. தற்போது தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தை பெறுகிறது.
குறிப்பாக 12 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 சதவீதம் வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. குறிப்பாக பாமகவை விட தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி இரண்டு மடங்கு அதிக வாக்கு சதவீதத்தை தேர்தலில் பெற்றுள்ளது.
.குறிப்பாக இந்த மக்களவை தேர்தலில் கூட அவர்கள் வழக்கமாக வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்பட்டு ஒலிவாங்கி சின்னம் புதிதாக கொடுக்கப்பட்டு அதுவும் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்டு அதை வைத்து 8.19% வாக்குகளை வாக்கு சதவீதத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி நேர்மையாக பணம் கொடுக்காமல் சுயேட்சை சின்னத்தில் நின்று வாக்குகளை பெற்றுள்ளனர். கூட்டணியின்றி தனித்து நின்ற நாம் தமிழர் கட்சியை நான் பாராட்டுகிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் வெற்றி பெற்ற விசிக
இதேபோல் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 மக்களவை தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுகிறது. 2019ம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் கூட்டணி கட்சியான உதயசூரியன் சின்னத்திலும் விசிக போட்டியிட்டது. அதனால் கடந்த முறை அந்த கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வென்றதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அந்தஸ்து பெற்றுள்ளது.