Editor's Picksஇந்தியாதமிழ்நாடு

பாலாற்றில் புதிய அணை – ஆந்திர முதல்வரின் அறிவிப்பால் கொதித்து எழுந்த தலைவர்கள்

பாலாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளர். குப்பம் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு. பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆந்திர முதல்வர் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

முதல் கட்டமாக தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது x பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். அவர் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன்.

எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டு இருந்தார்.

அதே போல அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் அவர்கள் தனது x பக்கத்தில் கூறியிருப்பதாவது, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் அறிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாக தமிழகத்திற்குள் நுழையும் பாலாறு, வட மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயம் மற்றும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகின்றது.

பன்மாநில நதிகளில் ஒன்றாக விளங்கும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தை மீறுவதோடு, உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மாநில உரிமை, மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் தலைவர்களில் ஒருவரான திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள், பாலாற்றின் குறுக்கே புதிய அணையை கட்டி லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சிப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

எனவே, தமிழ்நாட்டின் வட மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பாலாற்றின் குறுக்கே புதிய அணைகட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என ஆந்திர மாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருந்தார்.

Related posts