இந்தியாதமிழ்நாடுவிளையாட்டு

பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு – தலைவர்கள் பாராட்டு

மாற்று திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. மே 17ம் தேதி துவங்கிய இந்த போட்டிகள் மே 25ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு அவர்கள் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த சாதனையை பாராட்டி பலரும் மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றி தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள அண்ணாமலை, அவருக்கு தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், சகோதரர் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உலக அளவில் மேலும் பல சாதனைகள் படைத்து, நம்மை எல்லாம் பெருமைப்படுத்த வேண்டும் என்று, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

அதே போல அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களும் மாரியப்பன் தங்கவேலை பாராட்டி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விடா முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து தொடர் வெற்றிகளின் மூலம் தனது முத்திரைகளை பதித்துக் கொண்டிருக்கும் மாரியப்பன் தங்கவேலு அவர்கள், அடுத்தடுத்து நடைபெறும் போட்டிகளிலும் வெற்றிபெற்று விளையாட்டு உலகில் புதிய உச்சத்தை அடைய எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் வாழ்த்தியுள்ளார்.

மேலும் மாரியப்பன் தங்கவேலுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் x தளத்தின் மூலம் வாழ்த்து கூறியுள்ளார். அதில் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெறும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர் இன்னும் பல உச்சங்களைத் தொட்டு நாட்டிற்கு மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி வாழ்த்து கூறியுள்ளார்.

Related posts