மைதா மாவை கொண்டு தயாரிக்கப்படும் பரோட்டா, பீட்சா, பர்கர்கள், நூடுல்ஸ், பிஸ்கட், பப்ஸ், கேக் வகைகள், துரித உணவுகள் போன்றவற்றை விரும்பி சாப்பிடும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மைதா மாவில் என்ன சத்து உள்ளது ? மைதா மாவு எப்படி தயாரிக்கப்படுகின்றது ? மைதா உடலுக்கு ஆபத்தானதா? என்பது பற்றி அறிந்து கொள்வோம்.
மைதா மாவு எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது தெரியுமா ?
கோதுமை மாவை பதப்படுத்தி, அதில் இருந்து தவிடு, என்டோஸ்பெர்ம் போன்றவற்றை நீக்கிவிடுவார்கள். அதாவது, கோதுமையில் இருந்து எல்லா ஊட்டச்சத்துக்களும் நீக்கிய பிறகு வரும் உபரியே மைதா மாவு. மேலும், மைதாவை ரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர். உடலுக்கு தேவையான நார்ச்சத்து எதுவும் மைதா மாவில் இல்லை. மேலும் இதில் கிளைசெமிக் குறியீடு நிறைந்திருக்கும் என்பதால், ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சர்க்கரையை நோயை உண்டாகும் மைதா
மைதா மாவில் செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் மைதா உணவுகள் எண்ணெய் பயன்படுத்தியே சமைக்கப்படுகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன், இதய கோளாறு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதில் நார்ச்சத்து இல்லை என்பதால் மலச்சிக்கலை உண்டாகும். மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இராசயனங்கள் சேர்க்கப்படுவதால், அவற்றை உட்கொள்ளும் போது செரிமான கோளாறு ஏற்படும்.
இந்த பிரச்சனை உள்ளவர்கள் தொடவே கூடாது !
குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள், இதய நோயாளிகள் மைதாவை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த வகை உணவுகளை அளவுடன், மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடலாம். முடிந்த அளவுக்கு முழுவதுமாக தவிர்க்கும் பட்சத்தில் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு ஆரோக்கியமான வாழ்வை முன்னெடுத்து செல்லலாம்.