தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – அடுத்தடுத்து உயரும் பலி எண்ணிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுரேஷ், பிரவீன், சேகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக சாராய வியாபாரி கோவிந்தராஜை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 200 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக புதிய மாவட்ட ஆட்சியராக எம்எஸ் பிரசாந்த் நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதே போல கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதுர்வேதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பல்வேறு தலைவர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் X தளத்தில் கூறியிருப்பதாவது உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

“கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்” என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

அதே போல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கள்ளச்சாராய வியாபாரிகளுடன், திமுக அமைச்சர் திரு மஸ்தான் நெருங்கிய தொடர்பில் இருந்த விவரம் கடந்த ஆண்டே தெரியவந்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்துடைப்புக்காக நாடகமாடி, மீண்டும் ஐந்து உயிர்களைப் பறித்திருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் திறனில்லாமல் தொடர்ந்து உயிர்கள் இழப்பிற்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.

கள்ளச்சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் திரு மஸ்தான் மற்றும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காத துறை அமைச்சர் திரு முத்துசாமி ஆகிய இருவரையும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

Related posts