ஈரான் நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்தவர் இப்ராஹிம் ரைசி. இவர் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவருடன் பயணித்த ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட பல முக்கிய அதிகாரிகள் உயிரிழந்து விட்டதாக ஈரான் நாட்டின் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டது. இந்நிலையில் அந்த நாட்டின் தற்காலிக அதிபராக முகமது மொக்பர் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
விபத்து நடந்தது எப்படி ?
ஈரான் – அஜர்பைஜான் நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் உள்ள கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் உள்ளிட்ட அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் நாட்டின் அதிபர் இலாம் அலியேவுடன் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு நாடு திரும்பும் வழியில், தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டு உள்ளது. மூடுபனி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
18 மணி நேரத்திற்குப் பிறகு உடல்கள் கண்டெடுப்பு
விபத்து நடைபெற்ற அஜர்பைஜானை ஒட்டியுள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் 18 மணி நேரத்திற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
யார் இந்த இப்ராஹிம் ரெய்சி ?
63 வயதான இப்ராஹிம் ரெய்சி, 2021ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 62 சதவீத வாக்குகளை பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்பாக அந்த நாட்டின் நீதித்துறையில் முக்கிய பங்காற்றியவர். தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.
இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்த காரணத்தால் மே 21ம் தேதி இந்தியாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் நாடு முழுக்க தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் அறிவித்துள்ளது.