தமிழ்நாடு

ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க முதல்வரை வலியுறுத்துகிறேன் – எடப்பாடி பழனிச்சாமி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருதகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 2 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக ஆசிரியர்களும் மாணவர்களும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், நேற்று மதியம் 2 தரப்பை சேர்ந்த மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது மோதிக்கொண்டனர்.

இந்த மோதலில் பொன்னாக்குடியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு 2 மாணவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மூன்றடைப்பு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

இந்த நிலையில் இந்த ஜாதிய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி தனது x பக்கத்தில் ஒரு பதிவிட்டு இருந்தார்.

அதில் அவர் கூறியிருந்தாவது, திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.

சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர் கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது.

சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.

எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என அவர் பதிவிட்டு இருந்தார்.

இது போன்ற மோதல்கள் இனியும் நடக்காமல் இருக்க அரசும், அதிகாரிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் கோரிக்கையாக உள்ளது.

Related posts