இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடந்து வரும் இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதிராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் போட்டியிட்டு கொண்டிருக்கின்றன.
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா சென்னை?
இந்நிலையில் அடுத்த சில நாட்கள் நடைபெற உள்ள போட்டிகளின் முடிவை பொறுத்துதான் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன. எந்த அணிகள் முதல் 2 இடங்களை பெற்று குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற உள்ளன என்பது தெரிய வரும். இதில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றுக்கு எளிமையாக தகுதி பெற்றுவிடும். ஒருவேளை சென்னை அணி தோல்வியடைந்தால் ரன் ரேட்டின் அடிப்படையில் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இயலும். அதே நேரத்தில் பெங்களூரு நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால், ஹைதிராபாத் – பஞ்சாப் அணிகளுக்கிடையேயான போட்டியின் முடிவையும், மும்பை – லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் இந்த போட்டிகளில் ஹைதிராபாத் , லக்னோ அணிகள் தோல்வியடைந்தால் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புகள் உள்ளது. எனவே சென்னை, பெங்களூரு ஆகிய 2 அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
சென்னை அணியின் மைனஸ் இதுதான்
சென்னை அணியை பொறுத்த வரையில் முக்கிய வீரர்கள் பலர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி விட்டனர். அதே போல முஸ்தபிஷுர் ரஹ்மான், மொயின் அலி ஆகியோரும் நாடு திரும்பி விட்டனர், இதனால் அனுபவம் குறைந்த வீரர்களுடனேயே சென்னை அணி களம் காண்கிறது. ருத்துராஜ் கெய்க்வாட், சிவம் துபே மகேந்திர சிங் தோனி, சிமர்ஜித் சிங் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற வீரர்கள் அளிக்கும் பங்களிப்பை பொறுத்தே சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு அமையும். பெங்களூரு அணியிலும் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்து திரும்பி விட்டனர். ஆனாலும் விராட் கோலி, ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுவதும் பெங்களூரு அணிக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.