Editor's Picksசினிமா

மருத்துவமனையில் அவதிப்படும் நகைச்சுவை நடிகர் – உதவி கேட்டு வீடியோ வெளியீடு

நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ், வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமானவர். அந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ், 25 ஆண்டுக்கு மேலாக சண்டை பயிற்சியாளராக தமிழ் சினிமாவில் பணியாற்றி வந்தவர். பிறகு, உடல்நலக் குறைவு ஏற்பட்டுத் தொடர்ந்து சண்டை பயிற்சியாளராக வேலை செய்ய முடியாததால் நகைச்சுவை நடிகராக வடிவேலு உடன் அதிக திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக, “தலையில் இருந்து கை எடுத்தால் கடிப்பியா” என்ற நகைச்சுவை வசனத்தின் மூலம் பிரபலமானார். அது மட்டுமின்றி தனது ஆரம்பக்காலத்தில் பணக்காரன், ‘ராஜாதி ராஜா’ உள்ளிட்ட படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கும் அதேபோல பாலிவுட் நடிகர்களான, அமிதாப் பச்சன் , தர்மேந்திரா உள்பட பலருக்கும் வெங்கல் ராவ் டூப் போட்டவர்.

இவர் 2022 ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறு காரணமாகத் தனது சொந்த ஊரான விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெங்கல் ராவ் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜ் இயக்கத்தில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வெங்கல் ராவ், தனக்கு உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாகவும், மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பொருளாதார ரீதியாக யாரேனும் உதவி செய்யுங்கள் என்று கோரி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் வெங்கல் ராவ். எனக்கு கை, கால் விழுந்திடுச்சு. என்னால் நடக்க முடியவில்லை, பேசவும் முடியவில்லை. சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்குச் செல்லக் கூட பணம் இல்லை. மருந்து கூட வாங்க முடியவில்லை.

சினிமா நடிகர்கள், நடிகர் சங்கங்கள் . தங்களால் முடிந்த உதவி செய்தால் கூட போதும். இதற்கு மேல் என்னால் பேச முடியவில்லை.” என்று உருக்கமாகப் பேசி இருக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வெங்கல் ராவ் அவருக்கு உதவும் மாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 

Related posts