நமது வீடுகளில் தோசை, இட்லி போன்ற உணவுகளுக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி உள்ளிட்டவை மட்டுமே சைடிஷாக தயாரிக்கப்படுகிறது. அடிக்கடி ஒரே மாதிரியான உணவுகளை சமைப்பவர்களுக்கும் சாப்பிடுபவர்களுக்கும் போர் அடிக்கும் தானே, அந்த சலிப்பை போக்கும் வகையில், பல்வேறு நன்மைகளை கொடுக்கும் கேரட் மூலமாக சட்னி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
இது இட்லி, தோசை, சப்பாத்தி, வெள்ளை சாதம் என அனைத்து உணவுக்கும் அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கேரட் – 4
உளுத்தப்பருப்பு – 2 ஸ்பூன்.
புளி – சிறிதளவு
வெங்காயம் – 5
பூண்டு பல் – 4.
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
கா.மிளகாய் – 7
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் கேரட் மற்றும் வெங்காயத்தில் தோளை நீக்கி விட்டு, சுத்தம் செய்து பின் பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அதன் பிறகு, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடேற்றி கொள்ளவும், எண்ணெய் காய்ந்தத பிறகு அதில் உளுந்து, காய்ந்த மிளகாய் மற்றும் புளி சேர்த்து வதக்கிவிட்டு தனியே எடுத்து வைக்கவும்.
பின்னர், இதே பாத்திரத்தில் வெட்டி வைத்த வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். அதை தொடர்ந்து இதில் கேரட்டையும் சேர்த்து 3 முதல் 4 நிமிடத்திற்கு வதக்கி அடுப்பில் இருந்து இறக்கி கொள்ளவும்.தற்போது மிக்ஸி ஜார் ஒன்றில் வதக்கி வைத்த பொருட்களை எல்லாம் சேர்த்து, அதில் சிறிதளவு உப்பு சேர்த்து விழுதாக அரைத்து தனி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது, சட்னியை தாளிக்க, சிறிய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்துக்கொள்ளவும். பின் இந்த தாளிப்பினை தயாராக உள்ள சட்னியில் சேர்த்து கலந்துவிட்டால், ஊட்ட சத்துக்கள் நிறைந்த சுவையான கேரட் சட்னி தயார். இந்த அட்டகாசமான சட்னியை இட்லி, தோசை என அனைத்து வகை உணவுக்கும் சைடிஷாக வைத்து சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகள் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள்.