Editor's Picksதமிழ்நாடு

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் வெடி விபத்துகள் காரணமாக பல அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் அதே விருதுநகர் மாவட்டத்தில் மற்றுமொரு கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.

சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை வழக்கம்போல் பணியாளர்கள் வேலைக்கு வந்த நிலையில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆலையிலிருந்த 3 அறைகளும் இடிந்து சேதமாகியிருக்கின்றன.

இந்த சம்பவம் ஓட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன் .

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர உறுதிசெய்யப்படாதது குறித்து நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும் காட்டாச்சி நடத்தும் இந்த விடியா திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே, இதுபோன்ற தொடர் விபத்துகளும் உயிரிழப்புகளும். மெத்தனப் போக்கின் மொத்த உருவாக இருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

அதே போல அமமுக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். பந்துவார்பட்டியில் செயல்பட்டுவரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கின்றன.

முறையான உரிமம் பெறாமலும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமலும் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதும், அங்கு பணியாற்றும் அப்பாவி தொழிலாளர்கள் தங்களின் உயிர்களை பறிகொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

பட்டாசு ஆலைகளில் ஒவ்வொரு முறை நிகழும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் போது விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிந்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், நிவாரண உதவி வழங்குவதோடு தன் கடமை நிறைவடைந்துவிட்டதாக கருதும் திமுக அரசின் மெத்தனப் போக்கே அடுத்தடுத்து விபத்துகள் நடைபெறுவதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு அனைத்து பாதுகாப்பு விதிகளும் முழுமையாகக் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, இனிவரும் காலங்களில் பட்டாசு ஆலை விபத்துக்களை முற்றிலுமாக தவிர்க்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts