தமிழக பாஜகவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கூட்டம் தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக சார்பில் நடந்த முதல் கூட்டம் என்பதால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியினர் மத்தியில் எழுச்சி உரை ஆற்றினார்.
பாஜக 3 வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்
ஜூன் 4க்கு பிறகு இந்தியாவில் வடக்கு தெற்கு என்ற வேறுபாடு இருக்காது, தாமரை எப்படி படர்ந்து விரிந்து மலர்ந்து இருக்குமோ அதே போல இந்தியா முழுக்க பாஜக படர்ந்திருக்கும், தமிழகம் உட்பட தென் மாநிலங்களிலும் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் வெற்றியை பதிவு செய்திருப்பார்கள். பாஜக தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதும் , பிரதமர் மோடி அவர்கள் 3வது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம் என்று பேசினார்.
இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் கூட்டணி அமைத்து நரேந்திர மோடி என்ற தனிமனிதனை எதிர்த்தாலும் கூட அவர் இன்னும் பெரிய தலைவராக வளர்ந்து கொண்டே இருக்கிறார். பாஜக புலிப்பாய்ச்சலாக பாய்ந்து ஜூன் 4ம் தேதி ஆட்சியில் அமரும் என்றும் நிர்வாகிகள் மத்தியில் உற்சாகமாக பேசினார்.
பாஜக சரித்திர வெற்றி பெறும்
இந்த முறை கேராளாவில் பாஜக சரித்திர வெற்றி பெறும் என்று கூறிய அண்ணாமலை அவர்கள், தெலுங்கானாவில் 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று வாக்கு சதவீதத்தில் நம்பர் 1 கட்சியாக உருவெடுக்கும் என்று கூறினார். கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ் எப்போதும் கனவுலகத்தில் வாழ்வார்கள், பாஜக அங்கு 28க்கு 28 என முழு வெற்றியை பதிவு செய்யும் என்றும் ஆந்திர மாநிலத்தில் ஜன சேனா , தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுடன் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம், அதனால் அங்குள்ள 25 தொகுதிகளிலும் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்றும் அண்ணாமலை அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
டெல்லியில் கூட்டணி வைத்துள்ள ஆம் ஆத்மீ, காங்கிரஸ் கட்சிகள் 100 கிமி தூரத்தில் இருக்க கூடிய பஞ்சாப்பில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியை மக்கள் எப்படி நம்புவார்கள், இந்தியா கூட்டணியின் ஆசைகள் நிறைவேறாது.
தமிழகத்திலும் திமுகவினருக்கு எப்போதும் வருகின்ற ஆசை இந்த முறையும் வந்துள்ளது. அந்த ஆசை ஜூன் 4ம் தேதி காலை 11 மணி வரை மட்டும்தான் இருக்கும். அதுவரை அந்த கனவுலகத்தில் அவர்கள் வாழ்ந்து விட்டு போகட்டும், ஆனால் பாஜக தொண்டர்கள் வெற்றியை கொண்டாட தயாராக இருங்கள்.