அரசியல்இந்தியா

‘அக்னிபாத்’ இராணுவ வீரர்களின் மதிப்பையே குலைக்கும் திட்டம்!

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அக்னிபாத் திட்டம்

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின்படி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

seeman

சீமான் அறிக்கை

அந்த அறிக்கையில், ‘நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணியெனும் அடிப்படையில், இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்கு ஆள்சேர்க்கக் கொண்டுவரப்பட்டுள்ள ‘அக்னிபாத்’ எனும் புதிய நடைமுறையானது நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அதன் விளைவுகளை எண்ணிப்பார்க்கையில் பெரும் அச்சத்தைத் தருகின்றது.

கண்டனம்

எட்டு ஆண்டுகால பாஜகவின் அரசாட்சியில் கொண்டுவரப்பட்ட பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடும்போதெல்லாம், மக்களின் வாயடைக்க முயன்ற பாஜகவின் ஆட்சியாளர் பெருமக்கள், தற்போது இராணுவ வீரர்களின் மதிப்பையே குலைக்கும் வகையில் திட்டம் தீட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மோசமான நிர்வாகம்

இந்திய இராணுவத்தில் சேர உரிய கல்வித்தகுதியும், உடற்தகுதியும் இருந்தால், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இருபாலரும் முப்படைகளில் சேரலாம். ஆனால், அவர்களது பணிக்காலம் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு, பணிக்காலம் முடிந்ததும் 11,12 இலட்ச ரூபாய் நிதியுதவியோடு 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு அறிவித்திருப்பது மோசமான நிர்வாக முன்முடிவாகும்.

அரசின் அறிவிப்பு

நாட்டின் எல்லையைக் காக்க வேண்டுமெனும் அர்ப்பணிப்புணர்வோடும், தியாக மனப்பான்மையோடும் படைகளில் சேரும் இளைஞர்களை பணத்தைக் கொடுத்து நிறைவுறச்செய்து, நான்கே ஆண்டுகளில் வெளியேற்ற முனைவது மிகத்தவறான நடைமுறையாகும். முப்படைகளில் சேருவதை நாட்டுக்கு ஆற்றும் பெருந்தொண்டு என கருதி, லட்சக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் பணிபுரிய பயிற்சியும், முயற்சியும் எடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது கனவினைப் பொசுக்கும் வகையில் ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இராணுவப்பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரும் சறுக்கலாகும்’ என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts