பிரதமர் மோடி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை சந்திக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி இந்த மாதம் 10-ந்தேதி நிறைவு பெற்றது. இதனை கடந்த 28ம் தேதி மாலை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதற்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
டெல்லி பயணம்
இந்நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தது பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 16ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க பிரதமரை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரையும் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

