தமிழ்நாடு

ஒன்று சேர்ந்து திமுக அரசை தாக்கும் எதிர்கட்சிகள் – இபிஎஸ், அன்புமணி ராமதாஸ் அதிரடி

மனு நீதி திரைப்படத்தில் ஊரே சேர்ந்து வடிவேலுவை துரத்துவது போல, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக அரசை தினம்தோறும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் , அன்புமணி ராமதாசும் திமுக அரசை கண்டித்து தனித்தனியே அறிக்கை விட்டுள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

அதிமுக ஆட்சியில், வீட்டு உபயோகிப்பாளர்கள் அனைவருக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஒரு வீட்டில் இரண்டு இணைப்புகள் இருந்தால், அந்த வீட்டின் உரிமையாளரும், வீட்டில் வாடகைக்கு உள்ளவர்களும், 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தைப் பெற்று வந்தனர். தற்போது திமுக அரசின் மின் வாரியம் வீட்டின் உரிமையாளர் பெயரில் ஒரு மின் இணைப்பு மட்டுமே அனுமதிக்க உள்ளதாகவும், அதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகிவிட்டது. தனியாரிடமிருந்து மின் கொள்முதல், மின் மாற்றிகள் மற்றும் மின் உபகரணங்கள் கொள்முதல், நிலக்கரி கொள்முதல் என்று எல்லா வகைகளிலும் கொள்ளையடிப்பதற்காகவே, செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது. வசன வியாபாரிகள் அரசின் அடிப்படைக் கொள்கையாக இருக்கிறது. இதனால், மக்கள் அன்றாடம் இருளில் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது.

2016ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா அவர்கள் முதல் கையெழுத்திட்ட திட்டமான 100 யூனிட் விலையில்லா மின்சாரம், அனைத்து மக்களுக்கும் குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாடகைதாரர்களுக்கும் தொடர்ந்து கிடைத்திட வேண்டும் என்றும்; அனைத்திந்திய அதிமுக ஆட்சியின் போது இருந்த நிலைமையே தொடர வேண்டும் என்றும்; மின் இணைப்பு துண்டிப்பை சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்களுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே தெரிவித்து, அவர்கள் மின் கட்டணத்தைச் செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியிருந்தார்.

 

இதே போல பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது x தளத்தில் பதிவு செய்ததாவது

இந்திய அளவிலான மின்சார சந்தையிலிருந்தும், தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்தும் தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு கட்டணம் மற்றும் வரியாக ஏற்கனவே வசூலிக்கப்படும் ரூ.1.96 காசுகளுடன் கூடுதல் வரியாக 34 காசுகள் சேர்த்து வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது ஆகும். வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற பேராசையில் மின்சாரக் கட்டணத்தையும், வரிகளையும் உயர்த்துவது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு ஒப்பானதாகி விடும். எனவே, தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். இந்த கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Related posts